பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ரமண மஹர்ஷிகளது
அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும்
அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக்
கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வப்போது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல்
நான் யார்?
சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே
பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன்
சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான்
யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்
1. நான் யார்?
ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று.
சப்த,ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித் தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு,
சக்ஷுஸ், ஜிஹ்வை, கிராணமென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று.
வசனம், கமனம், தானம், மல விஸர்ஜ்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு,
பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று.
மனம் என்பது ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது.
நினைவுகளை யெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மன மென்றோர் பொருளில்லை; ஆகையால் நினைவே
மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமா யில்லை; தூக்கத்தில்
நினைவுகளில்லை, ஜகமுமில்லை; ஜாக்ர சொப்பனங்களில் நினைவுகளுள, ஜகமும் உண்டு.
சிலந்திப் பூச்சி எப்படித் தன்னிடமிருந்து, வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்
கொள்ளுகிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே
ஒடுக்கிக் கொள்ளுகிறது. மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும்.
ஆகையால், ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது; சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம்
தோன்றாது;
மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும்.
தான் என்பது ஆத்மசொரூபமே.
மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும்; தனியாய் நிற்காது.
மனமே சூக்ஷ்மசரீர மென்றும் ஜீவ னென்றும் சொல்லப்படுகிறது.
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவ தெதுவோ அஃதே மனமாம். நான் என்கிற நினைவு
தேகத்தில் முதலில் எந்த விடத்திற் றோன்றுகிற தென்று விசாரித்தால், ஹ்ருதயத்தி
லென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம்.
நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற் கொண்டுபோய்
விட்டுவிடும்.
மனதில் தோன்றும் நினைவுக ளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு.
இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே,
முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.
11. நான் யா ரென்கிற நினைவை சதா காலமும் பிடிக்கும் உபாயம்
என்ன?
பிற வெண்ணங்க ளெழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை “யாருக் குண்டாயின”? என்று
விசாரிக்க வேண்டும்.
எத்தனை எண்ணங்க ளெழினு மென்ன?
ஜாக்கிரதையாய் ஒவ்வோ ரெண்ணமும் கிளம்பும்போதே
“இது யாருக்குண்டாயிற்று?” என்று விசாரித்தால்
“எனக்கு” என்று தோன்றும்.
“நான் யார்” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத்
திரும்பிவிடும்;
எழுந்த வெண்ணமு மடங்கி விடும்.
இப்படிப் பழகப் பழக மனதிற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கி நிற்கும் சக்தி யதிகரிக்கின்றது.
சூக்ஷ்மமான மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும்போது ஸ்தூலமான நாம ரூபங்கள் தோன்றுகின்றன;
ஹ்ருதயத்தில் தங்கும்போது நாம ரூபங்கள் மறைகின்றன.
மனத்தை வெளிவிடாமல் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது
அந்தர்முகம் என்று பெயர்.
ஹ்ருதயத்திலிருந்து வெளியிடுவதற்குத்தான் பகிர்முக மென்று பெயர். இவ்விதமாக மனம்
ஹ்ருதயத்திற் றங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான நான் என்பது போய், எப்பொழுது
முள்ள தான் மாத்திரம் விளங்கும்.
எதைச் செய்தாலும் நான் என்கிற அகங்கார மற்றுச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்
எல்லாம் சிவ ஸ்வரூபமாய்த் தோன்றும்.
ஆகையால் மன மடங்கும்போது பிராணனும், பிராண னடங்கும்போது மனமு மடங்கும்.
ஆனால் சுழுத்தியில் மன மடங்கி யிருந்தபோதிலும் பிராண னடங்கவில்லை. தேகத்தின் பாதுகாப்பின்
நிமித்தமும், தேகமானது மரித்து விட்டதோ வென்று பிறர் ஐயுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால்
ஏற்பட்டிருக்கிறது.
ஜாக்கிரத்திலும் சமாதியிலும் மன மடங்குகிறபோது பிராண னடங்குகிறது.
பிராணன் மனதின் ஸ்தூல ரூபமெனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து,
உடல் மரிக்குங் காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது.
ஆகையால் பிராணாயாமம் மனத்தை யடக்க சகாயமாகுமே யன்றி மனோநாசஞ் செய்யாது.
மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை யடைகிறது. மனமானது சதா சலித்துக்
கொண்டே யிருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும்
பற்றம லதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால்
அதையே பற்றிக் கொண்டிருக்கும்.
மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்ற படியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுக
ளடங்க வடங்க ஏகாககிரத் தன்மை யடைந்து, அதனாற் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய்
சித்திக்கும்.
எல்லா நியமங்களினுஞ் சிறந்த மித சாத்வீக ஆகார நியமத்தால் மனத்தின் சத்வ குணம்
விருத்தியாகி ஆத்மவிசாரத்திற்கு சகாய முண்டாகிறது.
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.
ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே
தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார்.
சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல்,
“இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு”மென்று சதா சிந்திப்பதேன்?
புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம்
நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு
ஏன் கஷ்டப்பட வேண்டும்?
எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே
நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம்.
முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை
எப்படி எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்ம
முத்தையடையலாம்.
கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின்
அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்;
எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து
முத்தி யடைய வேண்டும்.
தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல், பிறராலெப்படி யறியலாம்? ராமனென்பவன்
தன்னை ராமனென்றறிவதற்குக் கண்ணாடி வேண்டுமோ?
21. முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின்
விசாரணை அவசியமா?
குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை யாராய்வதா லெப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னை யறிய
வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை
இத்தனை யென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை.
பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போ லெண்ணிக் கொள்ள வேண்டும்.
நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், கனவு (சொப்பனம்) க்ஷணிக மென்பது தவிர வேறு பேத மில்லை.
ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே
சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை
எடுத்துக் கொள்கிறது.
ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும், நினைவுகளும் நாமரூபங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.
எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே
நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதாற் பயனில்லை.
மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல், எப்படி நூல்களில்
விசாரிப்பது?
தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற் றானே யறிய வேண்டும். ‘தான்’ பஞ்ச கோசங்களுக்குள்
ளிருப்பது ; நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை.
ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே.
பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுக மென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது
அவிவேகத்தால் நினைக்கின்றோம்.
மனம் வெளி வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போ தெல்லாம்
அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது.
அப்படியே, தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்த
பொருளுக்குக் கேடுண்டாகும்போதும், மனம் அந்தர்முகமாகி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது.
இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது.
மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியி லலையு
மொருவன் நிழலிற் சென்று குளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின்
கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான்.
இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச்
செய்கிறவன் அவிவேகி.
ஆனால் விவேகியோ நிழலை விட்டு நீங்கான்.
அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி
லுழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது.
ஜக மென்பது நினைவே. ஜகம் மறையும்போது, அதாவது நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றது; ஜகம்
தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.